தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர்களுக்கு ஜீரோ கலந்தாய்வுக்கு எதிர்ப்பு

ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை கைவிடாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

By

Published : Oct 18, 2021, 9:53 AM IST

சென்னை:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த 19 மாதங்களாகத் தமிழ்நாட்டில் நேரடி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளின்றி முடங்கிக்கிடந்த ஆரம்ப - நடுநிலைப் பள்ளிகளும், மழலையர் பள்ளிகளும் நவம்பர் 1ஆம் தேதிமுதல் நேரடி வகுப்புகளுடன் செயல்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

நிதிப் பற்றாக்குறையில் பள்ளிகள்

பள்ளிகள் திறப்பைத் தொடர்ந்து, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், பள்ளிகளுக்கு வாங்க வேண்டிய கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தனது செயல்முறை ஆணையில் பள்ளிக்கல்வி ஆணையர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பள்ளிகளுக்குத் தேவையான நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்குரிய நிதி வசதி பள்ளிகளில் இல்லை. மேலும், இக்கல்வியாண்டில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்கிட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நிதி வழங்கிட வேண்டும்.

குழப்பம் ஏற்படுத்தும் ஜீரோ கலந்தாய்வு

மேலும், தற்போது பூஜ்யக் கலந்தாய்வு, ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. ஆசிரியர் பணி என்பது நிர்வாகப் பணி அல்ல. எனவே, குறிப்பிட்ட சில ஆண்டுகளில் அவர்களை பணியிடமாறுதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர் பணி என்பது கற்பித்தல் சார்ந்த பணி.

ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றும்போதுதான் பள்ளிச் சூழல், பள்ளியின் அமைவிடச் சூழல், பள்ளியில் பயிலும் மாணவர்களின் சமூகச் சூழல், பெற்றோர்களின் சூழல், மக்கள் தொடர்பு போன்ற பல கூறுகளையும் அறிந்து ஆழ்ந்த, தேர்ந்த அனுபவத்துடன் அப்பகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும் அப்பள்ளியின் வளர்ச்சிக்கும் பணியாற்றும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஏற்படும்.

அதுமட்டுமல்ல 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பெரும்பாலும் வயதில் மூத்த பணி ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள். அவர்களைப் பணியிடமாறுதல் செய்வது என்பது உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயலாக அமைந்துவிடும்.

’பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திடுக’

எனவே, ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய இடமாறுதல் அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை முற்றிலுமாகக் கைவிட்டு, விருப்ப மாறுதல் என்ற அடிப்படையில் நேர்மையான வெளிப்படையான பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும்.

19 மாதங்கள் கழித்து மாணவர்கள் பள்ளிக்கு வருகைதந்து கற்றலில் ஈடுபடவுள்ள சூழலில், மாணவர்களை கல்விச் சூழலுக்குப் பள்ளிச் சூழலுக்கு கொண்டுவருவதற்குரிய மிக மிக முக்கியமான பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அப்பணியில் கடமை உணர்வோடும் பொறுப்புணர்வோடும் முழுமூச்சோடு ஈடுபட உள்ள ஆசிரியர்களிடம் குழப்ப நிலையை, பதற்ற நிலையை உருவாக்கக்கூடிய இதுபோன்ற அறிவிப்புகளை பள்ளிக் கல்வித் துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

ஜீரோ கவுன்சிலிங், 10, 20 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்த ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலம் தழுவிய போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது

ABOUT THE AUTHOR

...view details