தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படவுள்ள சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நான்கு பணியில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் 2019 நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் மூன்றாவது நிலை சுருக்கெழுத்து தட்டச்சர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் ஏழாம் தேதிவரை (5, 6ஆம் தேதி நீங்கலாக) நடைபெற உள்ளது.
இந்த சுருக்கெழுத்து, தட்டச்சர் மூன்றாவது நிலை பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தொழில்நுட்ப கல்வி தகுதி, கல்வித்தகுதி, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தற்காலிக பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் அளித்த கல்விச் சான்று மற்றும் அனைத்து இன்றியமையாத சான்றிதழ்களை நேரில் கொண்டு வர வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியாக அனுப்பப்படமாட்டாது. மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவர் தொழில்நுட்ப கல்வி தகுதி, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இட ஒதுக்கீடு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் அப்போது உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
மேலும் அழைக்கப்படும் அனைவருக்கும் பணி ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அவர்களுக்கு உரிய நாளில் வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:கொரோனாவுக்கு இடையிலும் இலங்கையில் தேர்தல் பணிகள் தீவிரம்