குரூப் 4 தரவரிசை பட்டியல் வெளியானபோது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை குரூப்-2 ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 22 நபர்கள், குரூப்-4 தேர்வில் 20 நபர்கள், விஏஓ தேர்வில் நான்கு நபர்கள் என மொத்தம் 46 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு - மற்றொரு முக்கிய நபர் கைது!
சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக்குமார் (38) என்பவர், முக்கிய குற்றவாளி ஜெயக்குமாருடன் கூட்டு சேர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்பங்களை தனக்கு சொந்தமான சென்னை ராயப்பேட்டையிலுள்ள மேக்னஸ் கன்சல்டன்ஸி பிரைவேட் லிமிடெட் அலுவலகத்தில் வைத்து, விண்ணப்பதாரர்கள் இல்லாமலே முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் சொல்லும் குறிப்பிட்ட தேர்வாளர்களுக்கு ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.
மேலும், 2017ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வு எழுதி சென்னை தலைமைச் செயலக நீதித்துறை பிரிவில் உதவியாளராகப் பணியில் சேர்ந்த தீபக் என்பவருக்கு ஜெயக்குமாரை அறிமுகப்படுத்தி 8 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து முறைகேடாக தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உடந்தையாக இருந்துள்ளார். இதனால் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அசோக் குமார் என்பவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவுள்ளனர்.