குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விசாரணை மேற்கொண்டது. தேர்வில் முதல் 99 இடங்களைப் பெற்றவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சிப் பெற்றதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அந்த வழக்கினை விசாரிக்க சிபிசிஐடியிடம் 23ஆம் தேதி புகார் அளித்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை சிபிசிஐடி அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிபிசிஐடி அலுவலர்களின் விசாரணையில், தற்போதுவரை 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வு எழுதியவர்கள் 99 பேரையும் கைதுசெய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டிவருகின்றது.
இந்த நிலையில், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 ஏ தேர்வில் ராமேஸ்வரம் மையத்திலிருந்து தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் முறைகேடு செய்த எரிசக்தி துறையில் பணியாற்றிவந்த திருமுருகன் இதில் இடம்பெற்றுள்ளார். எனவே இது குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தேர்வர்கள் கோரிக்கைவைத்தனர்.