சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ம் ஆண்டில் நடத்த உள்ள போட்டித்தேர்வுகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், குருப்-2 நேர்காணல் பதவிகள், மற்றும் குருப்-2ஏ நேர்காணல் இல்லாத பதவிகளில் 1,294 இடங்களை நிரப்புவதற்கு அடுத்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான கால அட்டவணையில், குருப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும். உதவி இயக்குனர் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையில் 2 பணியிடங்களூக்கான (பெண்கள்) அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு மே மாதம் தேர்வு நடத்தப்படும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலம் நிருபர் பணியில் 6 நியமனம் செய்ய பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே மாதம் தேர்வு நடத்தப்படும். வனத்துறையில் வனக்காவலர் பணியில் 1,264 பேர் நியமனம் செய்ய மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும். குருப் 1 பதவிகளில் 65 இடங்களை நிரப்புவதற்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் முதல்நிலைத் தேர்வுகள் நடத்தப்படும்.
ஒருங்கிணைந்தப் பொறியியல் பணிகளில் 467 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும். குருப் 2 நேர்காணல் பதவிகள், மற்றும் 2-ஏ நேர்காணல் இல்லாத பதவிகளில் 1,294 இடங்களை நிரப்புவதற்கு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும்.