சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கடந்த 2022ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி குரூப் 2 முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இவ்வாறு முதல்நிலை தேர்வு எழுதிய 9,94,890 பேரில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள், உதவி ஆய்வாளர்கள், சார்பதிவாளர் நிலை - 2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் எனவும், குரூப்-2ஏ பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் நகராட்சி பணியாளர் ஆணையர் நிலை - 2 பணியிடங்கள், முதுநிலை ஆய்வாளர்கள் மற்றும் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்ளிட்ட 5,446 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த நிலையில் இதற்கான முதன்மைத் தேர்வினை இன்று (பிப்.25) 27,306 ஆண் தேர்வர்கள், 27,764 பெண் தேர்வர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 55,071 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 20 மாவட்டங்களில் 186 இடங்களில் 280 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்வு நடைபெறுகிறது.
குறிப்பாக சென்னையில் மட்டும் 32 இடங்களில் உள்ள 38 அறைகளில் 8,315 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் தேர்வுகள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தனியாக தரவரிசைப் பட்டியலும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது.
அதன் அடிப்படையில் துறை வாரியாக காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இந்த நிலையில், இந்த தேர்வினை எழுத தேர்வர்கள் இன்று குறித்த நேரத்திற்கு தேர்வு அறையில் காத்திருந்தனர். ஆனால், சென்னை, கடலூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில தேர்வு மையங்களில் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது.