சென்னை:குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (குருப்4) பணியில் தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலக பணி, தமிழ்நாடு சட்டப்பேரவைப் பேரவைச் செயலக பணி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தொழில்நுட்ப மற்ற சார்நிலைப்பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார்நிலைப் பணி உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கு ஏப்ரல் 28ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தேர்வாணையத்தின் தேர்வுகள் அனைத்தும் விண்ணப்பதாரரின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படும். பொய்யான வாக்குறுதிகளை சொல்லி தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர். இதுபோன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் எந்தவித இழப்புக்கும் தேர்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.
இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்து தகவல்களுக்கும் விண்ணப்பதாரர் முழு பொறுப்பாவார். விண்ணப்பதாரர் தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் தவறு ஏற்படின் தாங்கள் விண்ணப்பித்த இணைய சேவை மையங்களையும் பொது சேவை மையங்களில் குற்றம்சாட்ட கூடாது. விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும் முன் நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.