டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் ஓம்காந்தன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு தேவையான பொருள்களை அளிக்கவும், விடைத்தாள்களைப் பாதுகாப்பாக கொண்டுசெல்லவும் தேர்வாணையத்திலிருந்து பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட ஓம்காந்தன், மாணிக்கவேல் ஆகியோருக்கும் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிபிசிஐடி வெளியிட்ட அறிக்கையின்படி, ஒம்காந்தன் மட்டுமே அனைத்து தவறுகளையும் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பல்வேறு முரண்பட்ட கருத்துகளும் இடம்பெற்றுள்ளதால் தேர்வர்களிடம் விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் வலுத்துவருகிறது. குரூப் 4 தேர்வெழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் ஏபிடி பார்சல் லாரியில் ராமநாதபுரத்தில் இரவு 8 மணிக்கு ஏற்றப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இரவு 9.50 மணிக்கு விடைத்தாள்களைச் சேகரித்துக்கொண்டு சிவகங்கையைத் தாண்டி இரவு 10.30 மணியளவில் இரவு உணவுக்காக அரை மணி நேரம் லாரி நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து விக்கிரவாண்டிக்கு 7 மணி நேரத்தில் வந்த லாரி, விக்கிரவாண்டியிலிருந்து சென்னை வந்துசேர அதே 7 மணி நேரம் எடுத்துகொண்டதற்கான காரணத்தினை கூறவில்லை. சிவகங்கையைத் தாண்டி லாரி நிறுத்தப்பட்டு, காரில் லாரியை பின்தொடர்ந்துவந்த ஜெயக்குமாரிடம் விடைத்தாள்களை ஓம்காந்தன் ஒப்படைத்தார் என சிபிசிஐடி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 52 தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது எனவும் டிஎன்பிஎஸ்சி அறிக்கை கூறுகிறது.