தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒளிவு மறைவற்ற நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது தேர்வர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
சமீபத்தில் நடந்து முடிந்த குருப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில், 32 ஆயிரத்து 879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதிலிருந்து 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர், முதல் 100 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். இந்த 40 விண்ணப்பதாரர்களும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்தவர்கள் ஆகும்.