தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு 2019 செப்டம்பர் 1ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. தேர்வர்களுக்கான தேர்வு முடிவு 2019 நவம்பர் மாதம் வெளியிட்டது.
அப்பொழுது ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டனர் எனப் புகார் எழுந்தது. அதனை விசாரணை செய்த டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தகுதிநீக்கம் செய்தனர். அவர்களுக்குப் பதில் புதிய தேர்வர்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டது.
குரூப் 4 பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, தேர்வர்கள் துறைகளைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இன்று காலை தொடங்கியது. மார்ச் மாதம் 17ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
கலந்தாய்வில் இளநிலை உதவியாளர் நான்காயிரத்து 894 பணியிடங்கள், கிராம நிர்வாக அலுவலர் 608 பணியிடங்கள், வரைவாளர் பணியில் 505 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கலந்தாய்விற்கு தினமும் 250 பேர் வீதம் அழைக்கப்படுகின்றனர். கலந்தாய்விற்காக 11 ஆயிரத்து 138 தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்த பின்னர் தட்டச்சர், சுருக்கெழுத்து பணிக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. கலந்தாய்விற்கு வரும் தேர்வர்கள் அனைவரின் அழைப்புக் கடிதம் சரிபார்க்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு தேர்வரின் சான்றிதழும் அவர் ஏற்கெனவே பதிவேற்றம் செய்துள்ள சான்றிதழும் சரியாக உள்ளதா? எனவும், சான்றிதழ்கள் உரிய அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளதா? என்பதையும் டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - பெண்கள் உட்பட மூன்று பேர் கைது