குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! - TNPSC EXAM
சென்னை: குரூப் 4 பணியிடத்தில் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
![குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3834444-thumbnail-3x2-tnpsc.jpg)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குருப் 4இல் அடங்கிய (பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 6,491 காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வுக் கட்டணத்தை வருகின்ற 16.07.2019 வரை செலுத்தலாம் எனவும் அறிவித்திருந்தது.
கடைசி நாளில் விண்ணப்பிக்க வரும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அதனை எதிர்கொள்ளும் அளவில் தேவையான எண்ணிக்கையிலான சர்வர்கள் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தேவையான அளவு இணையதள அலைவரிசை கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், இன்று இரவு 11.59 மணி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் பயனாளர் குறியீடு, கடவுச்சொல் ஆகியன மறந்துவிட்டால் அதனை மிகவும் எளிமையாக மீட்டெடுக்கத் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpscexams.in) இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 4-க்கு விண்ணப்பம் பதிவு செய்து இறுதியாக சமர்ப்பித்து அதற்கான விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அது முழுமை பெற்ற விண்ணப்பமாகக் கருதப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்களை அவர்களின் பதிவுப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
பயனாளர் குறியீடு, கடவுச்சொல், புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம், நிரந்தரப்பதிவு தொடர்பான பிரச்னைகள், நடப்பு தேர்வு விண்ணப்பம் குறித்த தகவல்கள், பதிவுக்கட்டணம் அல்லது தேர்வுக்கட்டணம் செலுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களான 044 25300336, 25300337, 25300338, 25300339 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.