குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் முதல் 100 இடங்களுக்குள் 39 பேர் தேர்வாகினர். தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிபிசிஐடியில் புகார் அளித்தது.
அந்தப் புகாரினை விசாரிக்த சிபிசிஐடி அலுவலர்கள், அதில் தொடர்புடைய 14 பேரை தற்போது வரை கைதுசெய்துள்ளனர். சிஐடி அலுவலர்கள் 24ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ”2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று எரிசக்தித் துறையில் உதவியாளராகப் பணிபுரியும் திருகுமரன் (35) தந்தை பெயர் முனுசாமி குரூப் 4 தேர்விற்கு இடைத்தரகராகச் செயல்பட்டார்” எனக் கூறப்பட்டது.
குரூப் 4 தேர்வு முறைகேடு வெளியானபோது, குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் எனத் தகவல்கள் பரவின. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களுக்குள் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர் 37 பேர் இடம்பெற்றுள்ளனர். ஒரு தரவரிசைப் பட்டியலில் 37ஆவது நபராக குரூப் 4 முறைகேட்டில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் தேர்வாகியுள்ளார். அதேபோல், முதல் 100 இடங்களில் குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரத்திலிருந்து தேர்வானதுபோல் இந்தத் தேர்விலும் முறைகேடுகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.