சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குருப் 2 நேர்காணல் அடங்கிய பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தமிழ்நாடு சிறைத்துறையில் நன்னடத்தை அதிகாரி, தொழிலாளர் நலத்துறையில் உதவி தொழிலாளர் ஆய்வாளர், பதிவுத்துறையில் துணைப்பதிவாளர், லஞ்சம் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் சிறப்பு உதவியாளர், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத்துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகளில் 189 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும், குருப் 2 மற்றும் குருப் 2 ஏ பணியிடங்களில் 6 ஆயிரத்து 116 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான இடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, முதல்நிலைத் தேர்வு 2022ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து முதன்மை எழுத்துத்தேர்வு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் முடிவுகள் இன்று (ஜன.11) வெளியிடப்பட்டுள்ளது.
குருப் 2 நேர்காணல் அடங்கிய பணிகளுக்குத் தேர்வு செய்வதற்கு ஒரு இடத்திற்கு 3 பேர்(1:3) என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தேர்வு எண்கள் அடங்கிய பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்வாணையத்தின் அறிக்கையின் படி, நேர்காணல் பணியிடங்களை நிரப்பிய பிறகு நேர்காணல் இல்லாதப் பணியிடங்கள் நிரப்பப்படும். நேர்காணல் பதவிக்கு அழைக்கப்பட்டவர்கள் தேர்வாகவில்லை என்றால், நேர்காணல் அல்லாத பதவிகளுக்குச் சேர்க்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (குருப் 2 மற்றும் குருப் 2 ஏ) முதன்மை தேர்வினை எழுதிய 51 ஆயிரத்து 987 தேர்வர்களின், நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் ஒரே சமயத்தில், தேர்வாணையத்தின் வலைத்தளங்களில் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு பதவிகள்: நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 483 தேர்வர்களின் பதிவெண் உள்ளடக்கிய பட்டியல் தேர்வாணைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலிலுள்ள தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட தேர்வாணைய அறிவிக்கையிலுள்ள தகுதிகளை பெற்றிருக்கும் பட்சத்தில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கும் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும், நேர்முகத் தேர்வு பதவிகளை அப்பதவிகளுக்கான கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கும் தேர்வர்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தெரிவிற்கு கருதப்படமாட்டர்கள்.
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்:நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான முடிவுகள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான தெரிவு முடிவடைந்த பின்னர் தேர்வர்கள் முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (Interactive Mode) நேர்முக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு முன்னர் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.
குரூப் 2 தேர்வு முடிவுகளைக் அறிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://www.tnpsc.gov.in/English/latest_results.aspx?c=4593
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!