சென்னை: தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குருப் 2 பணியிடங்கள் 121, குருப் 2ஏ பணியிடங்கள் 5,097 ஆகியவற்றை நிரப்புவதற்கான அறிவுப்பு, 2022 பிப்ரவரி 23ஆம் நாள் வெளியிடப்பட்டது. அப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் முடிந்து, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வை 52 ஆயிரம் பேர் எழுதினர்.
அவர்களின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக நடைபெறும் முதன்மைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு முடிந்து 10 மாதங்களாகியும் இதன் முடிவு வெளிவராததால், தேர்வு எழுதிய பட்டதாரிகள் எப்போது முடிவுகள் வரும் என காத்திருக்கின்றனர்.
தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டால், அரசுப் பதவிகளில் சேர முடியும் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் முடிவுகள் கடந்த மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வரை தொடர்ந்து காலதாமதம் ஆகி வந்தது.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டுமென்றும், 52 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்ற முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் இவ்வளவு காலதாமதம் ஏற்படக்கூடாது. டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தொல்லியல் துறையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குருப் 2 தேர்வு முடிவுகள் குறித்து பதிலளித்திருந்தார். அப்போது பேசிய அவர், “குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியாகும். மேலும் காலதாமதத்திற்கான காரணம் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிடும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கம்!