சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமாக தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதும், வினாத்தாள் அச்சடிக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணியை அவுட்சோர்சிங் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த அவுட்சோர்சிங் எடுத்த நிறுவனம் தேர்வர்களுக்குரிய பதிவெண் வரிசைப்படி வினாத்தாள்களை அடுக்காமல் விட்டதே குளறுபடி ஏற்பட காரணம் என முதற்கட்டமாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 25ஆம் தேதி குரூப் 2 முதன்மைத் தேர்வு 20 மாவட்டங்களில் நடைபெற்றது. தேர்வர்களுக்கு கேள்வித்தாள்களை மாற்றி வழங்கியதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தேர்வுகள் காலதாமதமாக தொடங்கின. காலதாமதத்தை ஈடுசெய்யும் வகையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை உள்ளிட்ட சில நகரங்களில் தேர்வர்கள் கேள்விக்கான விடைகளை புத்தகங்களை பார்த்து, மொபைல் போன்கள் மூலமாகவும் தெரிந்துகொண்டு விடை எழுதியதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக மதுரையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.