தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் - 2 பாட மாற்றத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், நன்மை தான் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அலுவலருக்கும், வருவாய் அலுவலருக்கும் தற்பொழுது ஒரே நிலையில் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவர்களின் திறன்களை நேர்முகத் தேர்வினை விட எழுத்துத் தேர்வின் மூலம் நன்றாக சோதனை செய்ய முடியும் என்றும் கூறினர்.
ஏற்கனவே இருந்த முறையில் மாணவர்கள் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து இறுதி நிலை வரை செல்ல முடியும். ஆனால் தற்பொழுது கொண்டு வந்துள்ள முறையால் தமிழ் தெரியாதவர்கள் தேர்வில் தகுதிப்பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.