தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இதுகுறித்து தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜனவரி 20ஆம் தேதி குரூப்-1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.
சென்னை உள்ளிட்ட இதர மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக மூடப்பட்டு வருவதாகவும், அவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு இல்லாத காரணத்தால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்வுக்காகப் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து தேர்வர்கள் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் நோய்த்தொற்று தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று தெரிகிறது. எனவே இந்தத் தேர்வினை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு கரோனா வைரஸ் நோய்த்தொற்றை ஒரு தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுத்துவரும் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளையும் தேர்வர்களின் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த குரூப்-1 முதல்நிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.