சென்னை:தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில், 10ஆம் வகுப்பு கல்வி தகுதி நிலையில், காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெற்றது. பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற இருக்கும் இத்தேர்வில், பகுதி ஒன்றில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.
பகுதி இரண்டில் பொது அறிவில் 75 கேள்விகளும்; மனக்கணக்கு மற்றும் திறன் அறிதல் பகுதியில் 25 கேள்விகளும் என 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 316 வட்டங்களில் 7689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தினால் , அங்கு அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையம் மாற்றப்பட்டது. அதேபோல், சென்னை வேளச்சேரி தேர்வு மையத்தைத் தேர்வு செய்த தேர்வர்களில் ’Alwin memorial Public School, Selaiyur, Chennai’ தேர்வு கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் சில தேர்வர்களுக்கு டாக்டர் ஜானகி எம்ஜிஆர் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள்ளாகத் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் எனவும், முகக்கவசம் கட்டாயம். ஹால் டிக்கெட், புகைப்படம், பேனா தவிர வேறு எதையும் எடுத்துவரக்கூடாது என்றும், முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என அறிவித்து இருந்தது.
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவமும் சில இடங்களில் நடைபெற்றது.
சென்னை, புதுக்கல்லூரியில் குரூப் 4 தேர்வு எழுத தாமதமாக வந்ததாக கூறி சிலர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை, இதனால் தேர்வு மைய வாசலில் அமர்ந்து தேர்வர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, விழுப்புரம், சிவகங்கை, கடலூர், திருவாரூர் உட்பட சில மாவட்டங்களில் தாமதமாக வந்தவர்களை திருப்பி அனுப்பியதால், அரசுப்பணி ஆசையோடு தேர்வு எழுத வந்த தேர்வர்கள் ஏமாற்றத்துடனும் , சிலர் கண்ணீருடனும் திரும்பிச் சென்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசால் நிறுத்தப்பட்ட திருமண உதவித் திட்டம் குறித்து கேள்வி கேட்டுள்ளதால், சர்ச்சை கிளம்பி உள்ளது. 8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு விடையாக (எ) சாரதா அம்மாள், (பி) மூவலூர் இராமமிர்தம் (சி) முத்துலெட்சுமி (டி) பண்டித ரமாபாய்,( ஈ) விடைத்தெரியவில்லை என விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில் அது தொடர்பாக குரூப் 4 தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்: செல்போன் விவரங்கள் சிபிசிஐடி போலீசார் சேகரிப்பு