தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓராண்டிற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டு தமிழ்நாடு தேர்வாணையம் சாதனை! - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப் 1 தேர்விற்கான அனைத்துப் பணிகளையும் முடித்து, ஒரு ஆண்டிற்குள்ளாக இறுதி முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு  group 1 exam results  tnpsc announced the group 1 exam results  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார்
ஓராண்டிற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டு தேர்வாணையம் சாதனை

By

Published : Dec 31, 2019, 11:02 PM IST

Updated : Jan 1, 2020, 9:12 AM IST

இது குறித்து அதன் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' தேர்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொகுதி 1 பணிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான 181 காலிப்பணியிடங்களுக்காக, அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்ற முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் முடிவுகளை, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வெளியிட்டு தேர்வாணையம் சாதனை புரிந்துள்ளது.

அதிகப்படியான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இத்தேர்வு முடிவுகள் மிகக் குறுகிய காலத்திற்குள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் உட்பட எந்த மாநிலத் தேர்வாணையமும், தொகுதி 1க்கு இணையான பதவிகளுக்காக தேர்வினை ஓராண்டுக்குள் முடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தேர்வாணைய வரலாற்றில் ஒரு சாதனையாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கு (தொகுதி – 1 பணிகள்) 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜனவரி 1ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

மேற்படி தேர்வுக்குத் தகுதியான 2 லட்சத்து 29ஆயிரத்து 438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வு, மார்ச் 3ஆம் தேதி நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஒரே மாதத்தில் அதாவது ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முதனிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 9 ஆயிரத்து 442 விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை மாதம் 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் பங்கேற்ற 7 ஆயிரத்து 713 விண்ணப்பதாரர்களின் 23 ஆயிரத்து 139 விவரித்து எழுதும் விடைத்தாள்களும் விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, முதன்மை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் நான்கு மாத காலத்திற்குள் டிசம்பர் 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

முதன்மை எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் 363 விண்ணப்பதாரர்களுக்கு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன 23.12.2019 முதல் 31.12.2019 வரை நடைபெற்றது.

நேர்முகத்தேர்வு நடைபெற்ற இறுதி நாளான (31.12.2019) இன்றே, கலந்துகொண்ட தேர்வர்களின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தொகுதி 1 பதவிகளுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 6ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இதுகுறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படுவதுடன் தேர்வாணைய இணைய தளத்திலும் வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமாவளவன் கோலம் போட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

Last Updated : Jan 1, 2020, 9:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details