இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குரூப்-1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 ஏப்ரல் 5ஆம் தேதி காலையில் நடைபெறும். தமிழ்நாடு தொழிற்சாலை பணிகளில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு 2020 ஏப்ரல் 25,26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் புதிய தேதி அறிவிக்கப்படுகிறது. அதன்படி, குரூப்-1 பதவிகளில் 69 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு 2021 ஜனவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு தொழிற்சாலை பணிகளில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பதவிகளில் 12 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2021 ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குரூப்-4 பதவிகளில் அடங்கிய காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 2019 செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 2019 நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வில் தகுதி பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிகளுக்கான மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில் 2020 மார்ச் 20ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையும், ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையும் நடைபெற இருந்தது.
கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இந்த இரு பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தட்டச்சர் பதவிக்கான மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 2020 நவம்பர் 2ஆம் தேதி முதல் நடைபெறும்.
அதேபோல் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிக்கான மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 2020 நவம்பர் 28ஆம் தேதி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறித்து எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) மற்றும் ஈமெயில் (மின்னஞ்சல்) மூலம் தனியே தகவல் அனுப்பப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்த கல்விச் சான்று மற்றும் அனைத்து இன்றியமையாத சான்றிதழ்களை நேரில் கொண்டு வர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பானை, தபால் மூலம் தனியே அனுப்பப்பட மாட்டாது.
இவ்வாறு தேர்வாணையத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்