சென்னை: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பல்வேறு துறைக்கான பணியிடங்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அரசு வேலை கனவுடன் பல லட்சம் இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்காகத் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 67 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வு பணிகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 முக்கிய தேர்வுகளை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். அதன் வெளிப்பாடே கடந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பின் போது 7,300 காலிப்பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். குரூப்-4(TNPSC Group 4) தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
குரூப்-2 தேர்வு பணிகள்
அதற்கு அடுத்ததாகப் பெரும்பாலானோர் காத்திருப்பது குரூப்-2(TNPSC Group 2). குரூப்-2 நேர்முகத் தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), கூட்டுறவுச் சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளும், குரூப்-2 ஏ மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமைச் செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.