இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் 16.3.2020 முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
இதனால் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் வழக்கமான பள்ளி வேலை நாட்களில் 30 நாட்களுக்கு மேல் பள்ளிகள் இயங்காத நிலை ஏற்பட்டது. இதனால் 1 முதல் 12 வகுப்புக்கள் வரை பயிலும் மாணவர்களின் கல்விச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையிலும், கரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் குறித்த காலத்தில் பள்ளிகளைத் திறக்க இயலாத சூழல் தற்போது நிலவி வருகிறது.
2019 - 20 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டதாலும், 2020 - 21 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாலும் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்றைய நிலையில் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கற்றல் கற்பித்தல் செயல்முறைகளில் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான வழிவகைகள், அதற்காகப் பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட கூறுகளைப் பற்றி ஆய்வு செய்து தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை 12.5.2020 ல் வெளியிட்ட அரசாணையின் மூலம் தமிழ்நாடு அரசு அமைத்தது.
இக்குழுவில் அலுவல் ரீதியாக கல்வித்துறையில் இயக்குநர்கள் மட்டத்திலான அலுவலர்களும், யுனிசெப், அரசு அலுவலர்கள், சென்னை ஐ.ஐ.டி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
நிபுணர் குழுவில் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு பேரைக் கூடுதலாக அரசு சேர்த்துள்ளது. கரோனா நோய்த்தொற்றால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்புள்ளவர்களாகவும், தாங்கள் பயிலும் பள்ளிகளிலும், தங்கள் வீடுகளிலும் பல்வேறு கற்றல் வாய்ப்புக்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளது.