தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழுமையாக அகற்றப்பட்ட எண்ணூர் எண்ணெய் கசிவு.. 3 மாதங்களுக்கு தொடரும் கண்காணிப்பு!

Ennore oil leakage: எண்ணூரில் வெள்ள நீரில் கலந்த கச்சா எண்ணெய் முழுமையாக அகற்றப்பட்டாலும், ஏப்ரல் வரை 3 மாதங்களுக்கு கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

முழுமையாக அகற்றப்பட்ட எண்ணூர் எண்ணெய் கசிவு
முழுமையாக அகற்றப்பட்ட எண்ணூர் எண்ணெய் கசிவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 5:22 PM IST

Updated : Jan 11, 2024, 5:43 PM IST

சென்னை:சென்னை எண்ணூர் பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில், சிபிசிஎல் நிறுவனத் சார்பில் முதலில் எண்ணெய் கசிவு தங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறவில்லை என்றும், மணலி மற்றும் அதைச் சுற்றியுள்ள மற்ற ஆலைகளில் இருந்து கசிவுகள் வெளியேறியிருந்தால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல என தெரிவிக்கப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால அறிக்கையில், சிபிசிஎல் நிறுவனம் அதிகப்படியான கழிவுகளை தேக்கி வைத்திருந்ததே எண்ணெய் கசிவு ஏற்பட காரணம் என குற்றம் சாட்டியது.

எண்ணெய் கசிவுகிளை அப்புறப்படுத்தும் பணியில் 75 படகுகள், 4 ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. தண்ணீரில் ஏற்படும் நச்சுத்தன்மையை சரி செய்வது குறித்து சென்னை ஐஐடி குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஜன.11) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், "கடந்த டிச.19ஆம் தேதி எண்ணெய் கசிவுகள் முழுமையாக அகற்றப்பட்டது. தற்போது, எங்கேயும் எண்ணெய் கசிவுகள் இல்லை. முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சுமார் 1,937 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிநவீன இயந்திரங்களும் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டது. கசிவுக்கு முன் இருந்த நிலைக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

கசிவு எங்கிருந்து ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு செய்ததில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கசிவு வெளியேறியது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது. நிலத்தடி நீர் மற்றும் கடல் நீரில் எண்ணெய் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முடிந்துள்ளது. அதிகமான கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் இருந்து அகற்றப்பட்டது. தற்போது நீர்நிலைகளில் எந்த எண்ணெய் கலப்பும் ஏற்படவில்லை. 7 அடுக்குகளாக எண்ணெய் நீக்கம் பணிகள் நடைபெற்றது. அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து கசிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது.

மீனவர்கள் மற்றும் வனத்துறை ஒத்துழைப்புடன் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 40 பறவைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு செய்யப்பட்டது. முதலில் 500 பறவைகள் என்றும், பின்னர் 300 பறவைகள் என மொத்தமாக 800 பறவைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடையாறு மற்றும் பள்ளிக்கரணை சென்ற பறவைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஐஐடி-யின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எண்ணெய்கள் அகற்றப்பட்டாலும் அடுத்த 3 மாதத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனம் தரப்பில், "சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கசிவு ஏற்படவில்லை. நிவாரணம் மற்றும் கழிவு அகற்றம் குறித்து தீர்ப்பாயம் கேள்வி எழுப்பினால், சிபிசிஎல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குற்றம் சாட்டப்படுகிறது. கசிவுக்கு காரணம் எந்த நிறுவனம் என தெரியாமல் சிபிசிஎல் மீது குற்றம் சாட்டுவது விசாரணை இல்லாமல் தண்டனை வழங்குவதை போல உள்ளது.

எண்ணூர் பகுதியில் சுமார் 200 நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் எத்தனை அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகிறது என அரசு ஆய்வு செய்ய வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், "மற்ற நிறுவனங்கள மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதன் விவரங்களை ஏன் தெரிவிக்கவில்லை? அடுத்த விசாரணையின் போது மற்ற நிறுவனங்கள் மீதான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 27ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!

Last Updated : Jan 11, 2024, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details