சென்னை: தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் (TNPCB) இணைந்து மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை செயல்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் (TNPCB) இணைந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடையினை கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகின்றது.
மேலும் அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அதிகாரிகளை கொண்டு, மாவட்ட வாரியாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான தொடர் சோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது” என கூறப்பட்டுள்ளது.
திட்டத்தை அமல் படுத்தவிருக்கும் இணையதளம்:இந்த மஞ்சப்பை இணையதளம், பொதுமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் விவரங்கள், தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் பிரச்சார விவரங்களை அறிந்த கொள்ள உதவுகிறது.
தமிழ்நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட மாவட்ட வாரியான அமலாக்க விவரங்கள், பல்வேறு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் மாவட்ட வாரியாக வகைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களின் விவரங்கள் குறித்தும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஞ்சப்பை விற்பனை இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரங்கள் அமைந்துள்ள இடங்கள் மாவட்ட வாரியாக இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் சமீபத்திய சர்வதேச, தேசிய மற்றும் மாநில செய்திகள் மற்றும் வெளியீடுகளை வழங்கும். இதேபோல், மஞ்சப்பை செயலி, தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மஞ்சப்பை செயலியின் முக்கிய அம்சங்கள்:-
- கூகுள் வரைபடத்தின் மூலம் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள பயன்படுகிறது.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் விவரங்களை அறிந்து கொள்ள மற்றும் பதிவு செய்ய பயன்படுகிறது.
- தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர்க்கு எதிராக புகார்களை பதிவு செய்ய பயன்படுகிறது.
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை தொடர்பான உங்கள் காணொளிகளை பதிவேற்ற உதவுகிறது.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நடைபெற உள்ள நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை அறிய உதவுகிறது.
மேலும் இதனைப் பற்றித் தெரிந்துகொள்ள www.tnpcbmeendummanjappai.com மூலம் உள்நுழையவதற்கும் அல்லது கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, நமது பூவுலகம் எதிர்கொள்ளும் பெரும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கு பொறுப்புள்ள குடிமகனாக, “ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்” மற்றும் “சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம்” என உறுதிமொழி மேற்கொள்வதோடு, அதை உறுதியுடன் பின்பற்றுவோம் என அறிக்கை மூலமாக பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அசாமில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு; 5 லட்சம் பேர் பாதிப்பு