ஜாக்டோ ஜியோ முற்றுகைப் போராட்டம் சென்னை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் அமைப்பான ஜாக்டோ - ஜியோ நாளை (டிச.28) நடத்தும் தலைமை செயலக முற்றுகை போராட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என அதன் நிறுவனத் தலைவர் சா.அருணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் கூறியதாவது, “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் செயலக ஆசிரியர்கள் சங்கங்கள் (ஜாக்டோ ஜியோ) நாளை (டிச.28) தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளது.
இப்போது உள்ள சூழ்நிலையில், அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
முதலமைச்சரின் மேற்பார்வையில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அடுத்த சில நாட்களில் காற்றடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து, எங்கு பார்த்தாலும் கடல்போல் காட்சி அளித்தது.
இதன் காரணமாக, தமிழக மக்களின் இயல்பு வாழ்கையானது முற்றிலுமாக சிதைந்து போனது. இதில் 20க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். இந்நிலையில், மக்களைக் காப்பாற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வர பேரிடர் பணிகளில் அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்த வகையில், இப்போதுதான் பேரிடரில் இருந்து மக்கள் கொஞ்சமாக தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் எவ்வாறு பங்கு கொள்ள முடியும்? எனவே, நாளை நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் மாநில, மண்டல, ஒன்றிய, வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து; 2 பேர் படுகாயம்