சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசாணை எண் 101ஐ ரத்து செய்து, அரசாணை எண் 151 வெளியிடப்பட்டுள்ளது.
இதில், பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி நியமன அலுவலர் விவரம் குறிப்பிடப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்யும் அலுவலர் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு மறு பணி நியமன ஆணை வழங்கும் அலுவலர் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு உயர்கல்விக்கான அனுமதி ஆணை வழங்கும் அலுவலர் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு விடுப்பு வழங்குதல், பணிப்பதிவேடுகள் பராமரித்தல் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு குடிமைப் பணிகள் ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகள் 17அ மற்றும் 17ஆ வின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இறுதி ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் குறித்து அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.
அதேபோல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு இறுதி ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே வட்டார கல்வி அலுவலர்களுக்கு இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருந்த குற்ற குறிப்பாணை வழங்கும் அதிகாரம் தற்போது வழங்கப்படவில்லை. தொடக்க கல்வித்துறையில் தகுதிகாண் பருவம் முடித்து, ஆணை வழங்கும் அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலரா? வட்டாரக் கல்வி அலுவலரா? என்பது குறித்து அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கும் அலுவலர் விவரம் குறிப்பிடப்படவில்லை. தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு கடன் முன்பணங்கள், பொது வைப்பு நிதி தற்காலிக முன்பணம் போன்றவற்றில் ஒப்படைப்பு ஆணை வழங்கும் அதிகாரம் வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் இருவருடைய அதிகார வரம்பிலும் வழங்கப்பட்டுள்ளதை சரி செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்டபடி அரசாணையில் உள்ள அனைத்து குறைகளையும் சரி செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'தற்போதைய பணி நியமனங்களில் 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படமாட்டாது'