தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணி ஆணை எப்போது? வேதனையில் விடுபட்ட 5,336 பேர்! - கேங்மேன்

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்குத் தேர்வான 5,336 பேருக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

பணி ஆணை
Gangman

By

Published : Jun 21, 2021, 7:27 PM IST

Updated : Jun 21, 2021, 7:41 PM IST

சென்னை:பணி ஆணை கிடைக்கப்பெறாததால், தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, எப்போது பணி ஆணை கிடைக்கப்பெறும் என்ற கவலையுடன் கேங்மேன் தேர்வெழுதியவர்கள் சுமார் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏராளமான பணிகள் உள்ளன. இவற்றில் 'கேங்மேன்' பணி முக்கியப் பணியாகும். மின் இணைப்புக் கேட்பவர்களுக்கு நேரில் சென்று இணைப்பைக் கொடுப்பது, மின்கம்பம் நடுவது, மின்கம்பம் ஏறுவது, மரம் வெட்டுவது, லைன் இழுத்துக்கொடுப்பது, சென்னை போன்ற பெருநகரங்களில் பூமிக்கடியில் மின்சார வயர்கள் செல்வதால், மின் பணிக்காகப் பள்ளம் தோண்டுவது, மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்ட பிறகுத் தோண்டியப் பள்ளத்தை மூடுவது, ட்ரான்ஸ்ஃபார்மர்களைப் பழுதுபார்ப்பது எனப் பலவகையான பணிகளை கேங்மேன் பணியாட்கள்தான் மேற்கொண்டுவருகின்றனர்.

90 ஆயிரம் பேர் விண்ணப்பம்

பிரதானமாக கருதப்படும் கேங்மேன் பணிக்கான அறிவிப்பு, தமிழ்நாடு மின்சார வாரியத்தால், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வெளியானது. சுமார் 90 ஆயிரம் பேர் அதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.

முதலில் பிசிக்கல் டெஸ்ட் எனப்படும் உடற்தகுதித் தேர்வு நடைபெற்று அதில் தேர்ச்சியாகி, எழுத்துத் தேர்விலும் வெற்றிபெற்ற 14,949 பேர் கேங்மேன் பணிக்குத் தேர்வாகியிருந்தனர்.

குறைவான மதிப்பெண்

கடந்த 2019ஆம் ஆண்டிலேயே தேர்வானபோதும், அவர்களில் 9,613 பேருக்கு மட்டும் முதலில் பணி ஆணை வழங்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் இதுவரை பணிக்குச் சேராதவர்களை விட குறைவான மதிப்பெண்களைப் பெற்றவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து விடுபட்ட நபர் ஒருவர் கூறியதாவது, விண்ணப்பித்தவர்களுக்கு நடந்த உடல் தகுதித் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று, மேலும் எழுத்து தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளோம்.

ஆனால் எங்களுக்கு பணி ஆணை வழங்காமல் எழுத்து தேர்வில் குறைந்த மதிப்பெண்கள், அதாவது நூற்றுக்கு 0,2,5,7,8,12 உள்ளிட்ட மதிப்பெண்கள் எடுத்துள்ள பல நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளன.

பணி ஆணை எப்போது? கவலையுடன் காத்திருக்கும் விடுபட்டவர்கள்!

இதுதொடர்பாக பணி ஆணை விடுபட்ட ஜெயக்குமார் கூறுகையில்,"முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தபடி 14,949 கேங்மேன் பணி ஆணை வழங்காமல் வெறும் 9,613 நபர்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 5,336 தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்காததால் பல முறை போராட்டம் நடத்தினோம். ஆனால், எங்களுக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

எங்களில் பலருக்கும் வயது வரம்பு மீறியதால் இனிவரும் தகுதி தேர்விலும் கலந்து கொள்ள இயலாது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

கவலையுடன் விடுபட்டவர்கள்

மேலும் எங்களின் குடும்பங்கள் அனைத்தும் இந்த வேலையையே நம்பி இருக்கிறது. சரியான நேரத்தில் பணி ஆணை கிடைக்கப்பெறாததால், தற்போது எங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவுள்ளது. விடுபட்ட 5,336 குடும்பங்களுக்கு பணி ஆணை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன என, தகவல் வெளியாகியுள்ளன. மின் வாரியத்தில் மொத்தம் 44 வட்டங்கள் உள்ளன. அதில் 34 வட்டங்களில் மட்டுமே கேங்மேன் பணி நிரப்பப்பட்டுள்ளது.

மீதமுள்ள 10 வட்டங்களில் உள்ள காலியிடங்களில், இந்த விடுபட்ட 5,336 நபர்களையும் கேங்மேன் பணிக்கு அமர்த்த தகுந்த நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டுமென, விடுபட்ட நபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மின்சார வாரிய உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில்,"விடுபட்ட கேங்மேன் நபர்களுக்கு பணி ஆணை வழங்குவதைப் பற்றி பரிசீலிப்போம். மொத்தமுள்ள 14,949 நபர்களும் முறையான முறையில் உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனரா என்பதையும் ஆய்வு செய்வோம்" என்றார்.

Last Updated : Jun 21, 2021, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details