தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்வாக சீர்திருத்தம் என்னும் பெயரில் பணியாளர்கள் குறைப்பு, தனியார் நிறுவன பராமரிப்பிற்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவருகிறது. அவை மத்திய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டத்தை மறைமுகமாக அமல்படுத்துவதுபோல் உள்ளதாக மின்துறை பொறியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடனுக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கியதுதான் காரணம் என்றும், அதில் காற்றாலை மின்சார கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், காற்றாலை மின்சாரம் வாங்கியதால் 1 லட்சத்து 60 கோடி நஷ்டம் மின்சாரத் துறைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகளில் இருந்து 8543 மெகாவாட் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் அதிகாரம் படைத்த இவர்களின் தில்லுமுல்லு பலவிதமாக நடைபெறுகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அந்த நேரத்திலேயே பயன்படுத்தப்பட வேண்டும். மளிகைக்கடை பொருட்கள் போல் கையிருப்பு வைத்துக்கொள்ள முடியாது என்பதுதான் மின்சார அறிவியலின் அடிப்படை விதியாகும்.