சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான மின் ஊழியர் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், "மாநில அளவிலான மறு ஆய்வுக் கூட்டங்கள், இணைய அலுவலுக்கான பயிற்சி, ஐ.எம்.எஸ் போர்ட்டல், விலைப்பட்டியல் செயலாக்க முறை, டிஜிட்டல் கையொப்பத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பிற கூட்டங்கள் வீடியோ கான்ப்ரஸ்சிங் முறையில் நடத்தப்பட்டது.
கணினிகள், ஸ்கேனர்கள், வலுவான நெட்வொர்க் அமைப்புகள் போன்றவற்றை முறையாக வழங்காமல், உடனடியாக இணைய அலுவல், ஆன்லைன் பில்லிங் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அலுவலர்கள், ஊழியர்கள் தனிமனித இடைவெளி இல்லாமல் பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர். ஒரு கணினி அமைப்பில் கிட்டத்தட்ட 20 முதல் 30 பேர் பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தும் அலுவலக ஊழியர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்று தொடர்பாக மருத்துவத்திற்கு செலவிட்ட முழு செலவுகளை திரும்பிச் செலுத்துவதற்கும், கரோனா வைரஸ் காரணமாக இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்குவதற்கும் தமிழ்நாடு மின் வாரியம் தயக்கம் காட்டுகிறது.
இந்த சூழ்நிலையில் கரோனா கிருமி தொற்றை குறைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிமனித இடைவெளி, குளிரூட்டப்படாத அரங்குகளில் அலுவலக கூட்டங்களை நடத்த வேண்டும். பெரிய திரைகளை வழங்க வேண்டும். தனிப்பட்ட தொலைபேசிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும். அவ்வாறு செயல்படுத்தினால் மட்டுமே கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீள முடியும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பெண் உயிரிழப்பிற்கு தாங்கள் காரணம் அல்ல - மின் வாரியம் விளக்கம்!