சென்னை: பொறியியல் படிப்புகளான பிஇ, பிடெக் படிப்பில் 3ஆம் சுற்றில் சேருவதற்கு, பொதுப் பிரிவு கலந்தாய்வில் 60 ஆயிரத்தி 967 மாணவர்களுக்கு தற்காலிகமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ,பிடெக் படிப்பில் சேர, கடந்த மே மாதம் 5ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 4ஆம் தேதி வரையில் விண்ணப்பம் பெற்று, தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்தி 76 ஆயிரத்து 744 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு, இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்தி 19 ஆயிரத்து 346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1 லட்சத்தி 60 ஆயிரத்து 783 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 385 விளையாட்டு வீரர்களுக்கும், 163 மாற்றுதிறனாளிக்கும், 137 முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
முதல் கட்ட பொது கலந்தாய்வின் மூலம் 16 ஆயிரத்து 64 மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு, அவர்களின் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, 2ஆம் சுற்று கலந்தாய்வில் 40 ஆயிரத்து 741 இடங்கள் நிரம்பின. அதனடிப்படையில் தற்போது 3ம் சுற்று பொதுப்பிரிவு கலந்தாய்விற்கு 141.86 முதல் 77.50 மதிப்பெண்கள் வரை பெற்று, தரவரிசைப் பட்டியிலில் 87 ஆயிரத்து 50 முதல் 1 லட்சத்தி 76 ஆயிரத்து 744 வரை பெற்ற 89 ஆயிரத்து 695 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.