இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “விவசாயிகளின் வங்கி கடன் ரூ. 18 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில், கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கார்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 8 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த நரேந்திர மோடி அரசு, விவசாயிகளின் கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன்? கார்பரேட்டுகளுக்கு பரிவு காட்டுகிற மோடி விவசாயிகளை வஞ்சிப்பது நியாயமா?
நிதியமைச்சரின் நிவாரண அறிவிப்பு மீண்டும் படஜெட் உரையை படித்ததாகவே தோன்றுகிறது. உடனடி பலனை தராத அறிவிப்புகள் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றமே. கரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த 50 நாட்களாக நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு பொருளாதார திட்டத்தை மோடி அறிவித்தார். அதை நடைமுறைக்கு கொண்டுவருவதற்காக மூன்றாம் கட்டமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 11 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் 8 அறிவிப்புகள் விவசாயம் சார்ந்ததாக கூறியிருக்கிறார்.
நிதியமைச்சரின் பெரும்பாலான நிதி ஒதுக்கீடுகள் விவசாயிகளின் உள்கட்டமைப்பை உருவாக்குவதாக இருக்கிறது. கொள்முதல் நிலையங்கள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றை கட்டமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதே போல மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு போன்றவற்றிற்கு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே விவசாயிகளுக்கு உடனடி பலன்களை தரக்கூடிய வகையில் இல்லை. இவை நீண்டகால திட்டங்களாகும்.