தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் சாராம்சங்கள் - சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் சாரம்சங்கள்

2020 TNAssembly
2020 TNAssembly

By

Published : Jan 6, 2020, 10:07 AM IST

Updated : Jan 6, 2020, 2:16 PM IST

10:01 January 06

உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காலை 10 மணி அளவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். மேலும் தனது உரையை தொடர்ந்து பின்னர் அனைத்துத் துறைகளின் மீதான விவாதங்களைத் தொடரலாம் எனவும் அவர் கூறினார்.

ஆளுநர் உரையின் சாராம்சம்:

  • நிர்வாகத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள். சட்ட ஒழுங்கு விவகாரத்தில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது பெருமையளிக்கிறது.
  • கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே எந்தக் கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது.
  • மேகேதாட்டு திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த தேவையான அனுமதியை கேரள அரசும் மத்திய அரசும் வழங்க வேண்டும்.
  • இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
  • தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்த தகுந்த பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணி விரைவில் நிறைவுபெறும்.
  • 2019-20ஆம் ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 12,500 கோடி மதிப்பிலான கடன் இணைப்புத் தொகை வழங்கப்படும்.
  • உணவு, தானிய உற்பத்தி 150 மெட்ரிக் டன் என்ற அளவுக்கு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழ்நாடு மக்கள் எந்த மதத்தையோ சமயத்தையோ பின்பற்றினாலும் தமிழ்நாடு அரசு பாதுகாப்பு அளிக்கும்.
  • தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு சுமுகமான தீர்வை எட்ட வழிவகை செய்ய வேண்டும்.
  • மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக பொதுவிநியோக திட்டத்தில் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.
  • சேலம் தலைவாசலில் ரூ.1000 கோடியில் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.
  • பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு ரூ.563.30 கோடி மதிப்பில் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாடு திட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • 12,524 கிராம ஊராட்சிகளை இணைக்க தமிழ்நெட் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
  • ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்திற்கு சுமார் ரூ.7000 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
  • நாகை வெள்ளக்குப்பத்தில் ரூ.100 கோடி செவில் மீன்பிடித்துறைமுகம் அமைய உள்ளது.
  • கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக 10.5 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • ரூ.1 லட்சம் வரையிலான அசையா சொத்து கொண்டவர்கள் தற்போது ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்.
  • அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் விலையில்லா கொசுவலை வழங்கப்படும்.

ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார்.

இதற்கிடையே சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மனிதநேய ஜனநாயக கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, அமமுக சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் ஆகியோர் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதுதொடர்பாக பேசிய மு.க. ஸ்டாலின், "அதிமுக அரசால் தயாரித்துக் கொடுக்கப்பட்ட ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம். ஆளுநர் உரையால் நாட்டில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை" என்றார்.

NO CAA, NO NRC, NO NPR ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட கறுப்பு நிற டீ- சர்ட்டுடன் சட்டப்பேரவை வந்த தமிமுன் அன்சாரி கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்தாகவும், அதை அதிமுக தலைவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார்.

Last Updated : Jan 6, 2020, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details