சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப் படிப்புகளான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பி.டெக் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு 22,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் எனவும், அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூலை 26) காலை 10 மணிக்கு https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரபாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளன.
மேலும், கால் நடைகளுக்கான உணவுத்தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால் வளத்தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பி.டெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்பப் பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
இந்தப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த மாதம் 12-ம் தேதி காலை 10 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பித்தனர்.