சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2022 ‑ 2023ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் உணவுத் தொழில்நுட்பம் , கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்குத் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து செப்டம்பர் 12ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட 16,214 விண்ணப்பங்களுள், 13,470 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கும், 2,744 விண்ணப்பங்கள் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் பாடப்பிரிவிற்கும் முறையே பெறப்பட்டன.
அதன்படி, 2022 ‑ 2023ஆம் கல்வியாண்டிற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் https://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in. பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு (கலையியல் பிரிவு) கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர் சந்திரசேகர், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த முத்துப்பாண்டி, தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவி ஹரினிகா ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.