தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாம் தமிழர் வேட்பாளர்கள் 60 பேர் மீது பொய் வழக்குகள் பதிவு - சீமான் குற்றச்சாட்டு - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற 60-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சீமான் குற்றச்சாட்டு
சீமான் குற்றச்சாட்டு

By

Published : Feb 17, 2022, 5:05 PM IST

Updated : Feb 17, 2022, 9:18 PM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்றோடு நிறைவுபெறும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய அறிவிப்புகளையும், கட்சியின் செயல்திட்டங்கள் குறித்தும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (பிப்ரவரி 17) செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்குப் பொதுமக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேர்தலில் போட்டியிடுகின்ற 60-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தேர்தலில் பாஜக தனியாகப் போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும் என திமுக பரப்புரை செய்துவருகிறது. இதுபோன்ற கருத்துகள், எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

திமுக, அதிமுகவிற்கு வாக்களித்தால் பிரச்சினைகள் தீராது

பணம் உள்ளவர்கள்தாம் அரசியல் செய்ய வேண்டுமென்றால் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக் கூடாது பணநாயகம் நாடு என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டமாகக் கொள்ளையடித்தாலும் கொலை செய்தாலும் சரியென்ற நிலை நிலவுகிறது. இவற்றையெல்லாம் யார்தான் தட்டிக்கேட்பது?

மாற்றத்திற்காக மக்களிடம் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் திராவிட கட்சிகளைத் தாண்டி பிற கட்சிகளை ஆதரிக்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். திமுக அதிமுக கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தால் மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது.

நாட்டின் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றுவதற்காகவே நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களைப் பொய் வழக்கில் கைதுசெய்யும் திமுகவினர் துணிவு இருந்தால் பாஜகவின் ஒரு வேட்பாளரைத் தூக்கிக் காட்டட்டும். துணிவு இல்லாததால்தான் என் கட்சியின் வேட்பாளர்களைக் கடத்துகிறார்கள்.

அடுத்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டி

இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டும் திமுகவினருக்கு இதே செயலை நாம் தமிழர் கட்சி கட்டாயமாகத் திருப்பிக் கொடுக்கும். கடந்த கால வரலாற்றை திமுக திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிட பயந்து கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக இடத்தை ஒதுக்கிக் கொடுத்தது.

திராவிடம் என்றால் என்ன? திராவிடர்கள் என்பவர்கள் யார் யார்? முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்லட்டும். மாநிலத்தில் 10 லட்சம் கோடி கடன் எப்படி வந்தது.

திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து என்ன சாதித்திருக்கிறார்கள். இதை மக்கள் யோசிக்க வேண்டும். 2024, 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். மக்கள் வாக்களிக்காவிடில் நாங்கள் ஏமாறப்போவதில்லை. மாறாக மக்கள்தான் மற்றவர்களுக்கு வாக்களித்து தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: திமுகவுக்கு வெளிநாட்டவர் தீவிர வாக்குச் சேகரிப்பு

Last Updated : Feb 17, 2022, 9:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details