சென்னை:தமிழ்நாட்டில்15 மாநகராட்சிகளில் உள்ள ஆயிரத்து 64 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள மூன்றாயிரத்து 468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள எட்டாயிரத்து 288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தக்கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஜனவரி 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு கண்காணிப்பு, ஸ்ட்ராங்க் ரூமிலும் கண்காணிப்பு கேமரா போன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்றும், விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வேட்புமனுக்களில் பக்கங்கள் கிழிக்கப்பட்டதால், வேட்புமனு நிராகரிப்பு போன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதால் முழுமையாகக் காணொலிப் பதிவுசெய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் சிவசண்முகம் ஆஜராகி, வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை ஒவ்வொரு நடவடிக்கையும் காணொலிப் பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுவின் பக்கங்களைக் குறிப்பிட்டு ஒப்புகைச் சீட்டு வழங்க விதிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதுடன், விரிவாக பதில் மனு தாக்கல்செய்ய அவகாசம் வேண்டுமெனக் கோரிக்கைவைக்கப்பட்டது.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளதால், வேட்புமனு தாக்கல், தேர்தல், வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றைக் காணொலிப் பதிவுசெய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: மாரிதாஸ் மீது வழக்குத் தொடுத்த திமுக நிர்வாகிக்கு நோட்டீஸ்!