சென்னை:தமிழ்நாட்டில் பழைய நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களை நிறுத்தி விட்டு மாசற்ற மின்னாற்றலை உற்பத்தி செய்யும் வகையில் அவற்றை மாற்றியமைப்பதன் மூலம், தமிழ்நாடு அரசு ரூ. 4000 கோடி வரையில் லாபம் அடையலாம் என்று க்ளைமேட் ரிஸ்க் ஹாரிசான் (Climate Risk Horizon-CRH) என்கிற அமைப்பு மேற்கொண்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பழைய நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தியை நிறுத்திவிட்டு அக்கட்டமைப்பை மாசற்ற மின்னாற்றலை உற்பத்தி செய்யும் வகையில் மாற்றியமைப்பதன் மூலம் மாநிலத்தின் மின்சார உற்பத்திக் கட்டமைப்பை ஒரு நிலைத்தன்மைக்கு கொண்டுவர முடியும் எனவும், மேலும் ரூ. 4000 கோடி வரை இதனால் லாபம் உண்டாகும் என்றும் க்ளைமேட் ரிஸ்க் ஹாரிசான் அமைப்பு ‘Financial benefits of repurposing Tamil Nadu’s old coal plants’ என்னும் பெயரில் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கின்றது.
4 நிலையங்களில் ஆய்வு :Repurposing (ரெப்புர்போசிங்) என்பது ஆயுள் முடிந்த அல்லது முடியும் தருவாயில் உள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் அதன் சாம்பல் குட்டைகளுக்கான இடம் மற்றும் அதன் கட்டுமானம், தொடரமைப்பு, மின்கல சேமிப்பு ஆகியவற்றின் சில பகுதிகளை சூரிய மின்னுற்பத்தி போன்ற புதுப்பிக்கத்த ஆற்றல் உற்பத்தி மேற்கொள்ளும் வகையில் மாற்றியமைப்பதாகும்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் முனைவர் கிரீஷ் ஸ்ரீமலி மற்றும் முனைவர் அபினவ் ஜிண்டால் ஆகியோர் தமிழ்நாட்டில் உள்ள 3990MW உற்பத்தித் திறன் கொண்ட பழைய நிலக்கரி சார் அனல் மின்நிலையங்களை தூத்துக்குடி I,II & III (1050 MW), மேட்டூர் I & II (840 MW), வட சென்னை stage-I (630 MW) & நெய்வேலி II stage- I (1470 MW) நிறுத்துவதில் உள்ள செலவுகளையும், லாபங்களையும் இந்த ஆய்வின் மூலம் அளவிட்டுள்ளனர்.
இந்த அனல்மின் நிலையங்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள வாழ்நாளையும் தாண்டி அல்லது இறுதி கட்டத்திலும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உற்பத்தியாகும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதுடன் நிலக்கரி விநியோகத்திற்காக மிகவும் நீண்ட விநியோகத் தொடர்களை நம்பியுள்ளன. அண்மையில் நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் உண்டான மின்சார உற்பத்தி பாதிப்பு இந்த விநியோகத் தொடர் எவ்வளவு எளிதாக பாதிப்புக்குள்ளாகக் கூடியது என்பதை உணர்த்துகிறது.
CRHஇன் முந்தைய ஆய்வில் இப்பழைய அனல்மின் நிலையங்களை நிறுத்துவதாலும், அவற்றை புதிய, மலிவான புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு மாற்றுவதன் மூலமும் குறைந்த விலையில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்பதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ரூ.35,000 கோடி வரை சேமிக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி முறை மாற்றியமைக்கப்பட்டால், அவற்றை செயலிழக்கச் செய்வதற்கு ஆகும் (Decommissioning) செலவினை விட 2-3 மடங்கு அதிக லாபத்தை ஈட்டுவதோடு புதிய சூரிய மின் தகடு, மின்சல சேமிப்பு ஆகியவற்றை வாங்குவதற்கு தேவைப்படும் முதலையும் ஈட்டமுடியும் என்பதை ஆய்வு எடுத்துரைக்கின்றது.