சென்னை: நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 4-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணா விரத போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2009ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியம் என்று அரசு வழங்கி வருகிறது. இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் ஒரு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை நிறைவு பெற்றவை தொடர்ந்து ராபர்ட் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அனைத்து குறைகளையும் அமைச்சர் முழுவதுமாக கேட்டறிந்தார். முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். முதலமைச்சர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். முதலமைச்சர் ஆலோசனை நடத்தி முடிவை சொல்லும் வரை போராட்டம் தொடரும். முதலமைச்சரை சந்திக்க அமைச்சர் நேரம் வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலைமையில் இருக்கிறோம்.