சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டார். அதனை வெளியிட்டு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ’’தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வினை தமிழ்நாட்டில் உள்ள 12,638 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்கள் எழுதினர். இவர்களில் சுமார் 4 லட்சத்து 55 ஆயிரத்து 17 மாணவிகளும், 4 லட்சத்து 59 ஆயிரத்து 303 மாணவர்களும் தேர்வை எழுதினர்.
தற்போது அவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதில் சுமார் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்; தேர்ச்சி 91.39 சதவீதமாகவும் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்ச்சி விகிதம்: மேலும் தேர்வு எழுதிய 4 லட்சத்து 55 ஆயிரத்து 17 மாணவியர்களில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 710 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆகையால் மாணவிகளின் தேர்ச்சி சதவீதமாக 94.66ஆக உள்ளது. 4 லட்சத்து 59 ஆயிரத்து 303 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி வீதம் 88.16 சதவீதமாக உள்ளது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு, மே மாதம் நடந்த பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்கள் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேரில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 90.07 ஆக இருந்தது.
ஆனால், கடந்தாண்டை விட நடப்பாண்டில் மாணவர்கள் 1.32 சதவீதம் அதிக அளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் தேர்வு எழுதிய பள்ளிகளில் சுமார் 3,718 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளன.