தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்காக 100 விழுக்காடு பணியாளர்களும் தலைமைச் செயலகத்துக்கு தொடர்ந்து பணிக்குவருகின்றனர்.
இச்செயலகத்துக்கு அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், காவலர்கள் உள்பட பலரும் தினமும் பணிக்கு வருகின்றனர். மேலும் ஆறாயிரத்து 500 செயலக பணியாளர்களில் இதுவரை 256 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பணியாளர்களிடையே பதற்றம் நிலவுகிறது.
மேலும் இந்தக் கரோனா தொற்று, தங்கள் குடும்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் பணியாளர்கள் உள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் உடல் பரிசோதனை வெப்பமானி, கிருமிநாசினி, தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இருப்பினும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது.
இது குறித்து ஏற்கனவே தலைமைச் செயலக சங்கம் சார்பில் 50% பணியாளர்கள் கொண்டு இயங்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.