சென்னை:வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிற்குக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்டங்களுக்குப் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உள்பட 18 மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 'ஆரஞ்ச் அலர்ட்' (Orange Alert in Tamil Nadu) விடுத்துள்ளது. தமிழகத்திற்கு வரும் 6ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு எச்சரிக்கை:தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 04.11.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.