சென்னை:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், இந்த 2022-23ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு எழுதுவதற்கு தாங்கள் முன்னர் படித்த பள்ளிகளிலிருந்து எந்த பிரிவில், எந்த மாெழியில் படித்தார்கள் என்பதற்கான 'உறுதிச் சான்றிதழ்' (Bonafide certificates) வாங்கி வர வேண்டும் என சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் துறை ஆண்டுதோறும் தயாரிப்பது வழக்கம். அந்தவகையில் வரக்கூடிய மார்ச், ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் ஆகின.
சிரமத்தில் பள்ளி மாணவர்கள்:இதனிடையே முன்னதாக, மாணவர்களின் பெயரை சேர்ப்பதற்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலும், அரசு பள்ளி அல்லது தனியார் பள்ளியா?, தமிழ்வழியா (அ) ஆங்கில வழியில் படித்தார்களா? என மாணவர்கள் உறுதிச் சான்றிதழ் எனப்படும் Bonafide certificates சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொதுத்தேர்வு எழுதும் 11ஆம் வகுப்பு மாணவர்களும்,12ஆம் வகுப்பு மாணவர்கள் முன்பு எங்கு படித்தார்கள் என்கிற விவரங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வின் இடையே மேலும் மனஉளைச்சல்:இந்நிலையில், இந்த சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. ஒரு மாணவர் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தொடக்க நிலை வகுப்புகளை வேறு மாநிலத்திலோ (அ) வேறு நாட்டிலோ பயின்று இருக்கலாம். அவ்வாறு மாணவர்கள் படித்த பள்ளி காலப்போக்கில் மூடப்பட்டிருக்கலாம். இது போன்ற நிலைமையில், குறிப்பிட்ட மாணவர் Bonafide Certificate சமர்ப்பிப்பது சாத்தியமில்லை. மேலும், பொதுத்தேர்வு இன்னும் 2 மாதங்களில் தொடங்க உள்ள நிலையிலும், தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் சான்றிதழ் வாங்க அலையவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.