சென்னை:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில், வரும் 28ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நாளை (செப் - 21) 6 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 - 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 - 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழைப்பதிவு:சுருளக்கோடு (கன்னியாகுமரி) 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது. பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 10 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. வேடசந்தூர் (திண்டுக்கல்), புத்தன் அணை (கன்னியாகுமரி), கள்ளிக்குடி (மதுரை) ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. ஒகேனக்கல் (தருமபுரி), பாலக்கோடு (தருமபுரி), புகையிலை நிலையம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), ஆண்டிபட்டி (மதுரை) ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. சின்கோனா (கோயம்புத்தூர்), திண்டுக்கல், முக்கடல் அணை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அரவக்குறிச்சி (கரூர்), பேரையூர் (மதுரை), எருமப்பட்டி (நாமக்கல்), மேட்டூர் (சேலம்), தென்பரநாடு (திருச்சி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் தலா 5,செ.மீ. மழை பதிவாகி உள்ளது” என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கொசுத் தொல்லை தாங்கலயா? இதைக் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.. செம்ம ரிசல்ட் கிடைக்கும்.!