தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஆகஸ்ட்.13) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. அதில் இடம்பெற்றுள்ள பெட்ரோல் விலை குறைப்பு, 150 நாட்களாக உயர்த்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களும் வரவேற்கத்தக்கவை.
அதே நேரத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பதாகும். இந்த வாக்குறுதியின் மீது ஒரு வார்த்தை கூட இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி அகவிலைப்படியை முடக்கி வைத்த ஒன்றிய அரசு, அதை ஜூலை 1, 2021 முதல் தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.