அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மது விலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள். மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மதுவை இருப்பு வைக்கவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும். மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி, அரசின் வருவாயையும், சில தனி ஆள்களின் வருவாயையும் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கமுக்கமாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டை ஒரு சொட்டு மது கூட இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம். அதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பெயருக்கு தீரா அவப்பெயரையும், துடைக்க முடியாத களங்கத்தையும் ஏற்படுத்திவிடும். இதை உணர்ந்து திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் அரசாணை திரும்பப் பெறப்படும் வரை மக்களைத் திரட்டி மிகக் கடுமையான பல கட்ட போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981 என்ற சட்டத்தில் திருத்தம் செய்து, திருமண மண்டபங்கள், அரங்கங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறிக்கொள்ள வகை செய்யும் அனுமதியை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும் என்று தேர்தல் பரப்புரையின்போது திமுக அளித்த வாக்குறுதிக்கு மாறாக, அனைத்து வீடுகளிலும் மதுவைப் பயன்படுத்தும் வகையில் அறிவித்து மது விற்பனையை விஸ்தரித்திருப்பது இதுவரை போதைக்கு அடிமை ஆகாதவர்களையும் குறி வைத்து சமூக மது பழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை விடியா அரசு மேற்கொண்டுள்ளதா?