சென்னை:இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாள்தோறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாத இலங்கையில் இருந்து மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகி வருகிறது.
இதனிடையே, சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதி நிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்குப் பதிலுரை நேற்று (மார்ச்.24) நடைபெற்றது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் பதிலுரைக்குப் பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
விடிவு நிச்சயம்: அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இலங்கைத் தமிழர்கள் இன்றைக்குப் பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில், அங்கு பரிதவித்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழர்கள் அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்ற செய்திகளையெல்லாம் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதுபோன்ற சூழலில் ஒன்றிய அரசுடன் தொடர்புகொண்டு, இந்த விவகாரத்தை எப்படி கையாளவேண்டும் என்று ஆலோசித்து வருவதாகவும்; இதற்கு நிச்சயம் விடிவு காலத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கையிலிருந்து வரும் தமிழர்களை எவ்வாறு சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்று நேற்று அரசு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு வழங்கப்பட்டு இதுகுறித்து மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்து வருவதாக ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்விடங்களை வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக தரவேண்டும் என ஒன்றிய அரசுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொப்புள்கொடி உறவுகள்:இது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை குடிமக்களில் தமிழர்கள் கடும் பஞ்சத்தால் - வறுமையால் அவதிப்படுகிற நிலையில், ‘‘பஞ்சம்‘’ காரணமாக வேறு வழியின்றி மீண்டும் ‘ஏதிலிகளாக’ எம் தொப்புள்கொடி உறவுகள் தமிழ்நாடு நோக்கி வருவோருக்கு ஆதரவுக் கரத்தை, மனிதாபி மானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு திமுக அரசு, வழங்கி சட்டப்படி உதவிகள் செய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கூறியிருப்பது, கருணை மழை பொழிந்ததாகவே கருதி வரவேற்கப்படவேண்டும். நிலைமை சரியாகும் வரை அவர்களுக்கு தமிழ்நாடு ஆதரவு காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஆதரவு அளிக்க வேண்டியது கடமை : மேலும் இது தொடர்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் நமது தொப்புள் கொடி உறவான தமிழர்கள் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக தமிழகம் வரத்தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. அப்படி வருகிறவர்களை எந்தவித இன்னலுக்கும் ஆளாக்காமல் ஆதரவளிக்க வேண்டிய கடமை தாய்த் தமிழகத்தின் அரசுக்கு இருக்கிறது.
கரை சேர்க்க வேண்டும்:தமிழகத்தையொட்டிய கடற்பகுதியிலுள்ள திட்டுகளில் நிராதரவாக இறக்கிவிடப்படும் இலங்கைத் தமிழர்களை கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் பாதுகாப்பாக அழைத்து வந்து கரை சேர்க்க வேண்டும். இப்பணிகளை உள்ளார்ந்த அக்கறையோடு மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
கனிவுடன் கேட்ட முதலமைச்சர்: இது குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கூறியுள்ளதாவது, "தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழர்கள் போதுமான வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். மேலும் இதுகுறித்து (மார்ச்.24) காலை முதலமைச்சரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துத் தப்பி வரும் அவர்களில் பெண்கள் குழந்தைகளை அகதி முகாம்களிலும், ஆண்களை புழல் சிறையிலும் அடைப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து எடுத்துரைத்தேன்.
தமிழர்களின் பண்பாடும் அல்ல:அதைக் கனிவுடன் கேட்ட முதலமைச்சர் விரைவில் ஒன்றிய அரசுடன் பேசி இந்த சிக்கலை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். இது ஒருபுறமிருக்க, இலங்கையில் இருந்து பெரும் கவலையோடு வரும் ஈழத்தமிழர்களை, தமிழ்நாட்டிற்கு அழைத்து வர, தமிழ்நாட்டை சேர்ந்த படகு உரிமையாளர்கள் பெரும் தொகையை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இது அதிர்ச்சி ஏற்படுத்துவதோடு, வேதனையளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மனவேதனையை தருகிறது:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து, அந்நாட்டுக் குடிமக்கள் அன்றாட செலவினங்களைக்கூட எதிர்கொள்ள முடியாது, வறுமைக்கும், ஏழ்மைக்கும் உள்ளாகி, தவித்து வருகிற செய்திகள் கவலையளிக்கின்றன.