சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையாகியிருக்கும் வி.கே. சசிகலா வருகின்ற 8ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார். இவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அமமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதனடிப்படையில், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூடி சசிகலாவை வரவேற்க காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறவேண்டும் என்ற அடிப்படையில் அமமுகவினர் சென்னை காவல்துறையிடம் அனுமதிக் கடிதம் அளித்திருந்தனர்.
அந்தக்கடிதம் தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலையில், பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்று (பிப்.6) வெளியிட்ட அறிக்கையில், சசிகலா வரவேற்பு நிகழ்ச்சிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதனை மறைமுகமாக மறுக்கும் வகையில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்தில் சமய, அரசியல் ரீதியான பிரச்னைகள் ஏதுமின்றி பொது அமைதியை நிலைநாட்டி சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வருகின்றனர். இந்தச்சூழ்நிலையில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்புகளைப் போல் தங்களை பாவித்துக் கொண்டு பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையில் எடுத்து போக்குவரத்தையும் பொதுமக்கள் அமைதியையும் பாதிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதுடன் மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ இடையூறாக இருக்கும் என்பதால் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது. இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற 8ஆம் தேதி வி.கே. சசிகலா சென்னை வருவதையொட்டி அமமுகவினர் அவரை வரவேற்க பெருந்திரளாகக் கூடி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் இத்தகைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மூன்றாவது முறை ஆட்சியைத் தக்க வைக்குமா அ.தி.மு.க., தடை போடத் தயாராகும் தி.மு.க.,