சென்னை:கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் இருப்போர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள், மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா? என ஆக்ஸி மீட்டர் கருவியை கொண்டு ரத்த ஆக்ஸிஜன் அளவை பரிசோதனை செய்து கொண்டே இருக்கும்படியும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மோசடி செயலி
இதனால், பலரும் ஆக்ஸிமீட்டர் கருவியைப் பயன்படுத்திக்கொண்டனர். இதனையடுத்து சில விஷமிகள் ரத்த ஆக்ஸிஜன் அளவை செல்போன் மூலமே கண்டறியலாம் என செயலி ஒன்றை வடிவமைத்து விளம்பரம் செய்யப்பட்டுவருகிறது.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யும்போது இருப்பிடம், கேமரா, பிற அனுமதிகளை கோருகிறது. இதற்கு அனுமதி வழங்கினால், பயனர்களின் ஓடிபி, வங்கி விவரங்கள், முக்கியத் தரவுகள், புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. மேலும், கேமரா லைட் மூலம் ரத்த அளவை கணக்கிடலாம் என தெரிவிப்பதால், பயனர்கள் தங்களது விரல்ரேகையை வைக்கும்போது அந்தப் பதிவையும் மோசடி கும்பல் திருடுகிறது.