சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. அந்நிறுவனங்கள் பங்குச்சந்தை, ஆன்லைன் வர்த்தகம் போன்ற தொழில்களில் ஈடுபடுவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியும் பொதுமக்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
இதில் முக்கியமானவையாக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனம் மற்றும் ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகிய நிதி நிறுவனங்கள் என தெரிகிறது.
இந்த நிறுவனங்கள் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்தில் சுமார் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வட்டியாக வழங்குவதாக அறிவிக்கிறது. பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்காக முகவர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்கிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆடம்பர நட்சத்திர விடுதிகளில் கூட்டங்கள் நடத்தி, ஆசை வார்த்தைகளால் மக்களை ஈர்த்து, கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்று வட்டியும், அசலும் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளன.
இந்த மோசடி நிறுவனங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்பான மோசடி புகார்களின் அடிப்படையில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி சென்னை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 37 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 1 லட்சத்து 09 ஆயிரத்து 255 பொதுமக்கள் அந்நிறுவனத்தில் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிதி நிறுவனத்தின் மீதான மோசடி புகார்களின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
எல்என்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் இதுவரை திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் இந்நிறுவனத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.