சென்னை:முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் பறிபோன ஆவணங்கள் தொடர்பான புகார் அறிக்கை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முறையாக கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. தொழில்நுட்ப கோளாறால் எழுந்த இப்பிரச்னை சரிசெய்யப்பட்டதாக காவல்துறை இன்று (ஆக.24) விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆர்சி புக் ,பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ் முக்கிய அடையாள அட்டைகள் தொலைந்து போகும்போது அதைத் திரும்பப் பெறுவதற்கு தொலைந்துபோன இடத்திற்கு அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்து அதற்கான ரசீதை பெற வேண்டும். அந்த காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட ரசீதை அடிப்படையாக வைத்து தொலைந்துபோன ஆவணத்தை புதிதாக பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த நடைமுறை காரணமாக, பல முக்கிய ஆவணங்கள் பொதுமக்களுக்கு தொலைந்தபோன உடனே புதிதாக பெறுவதற்கு மிகவும் காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு குற்ற ஆவண காப்பகம், அதிகாரப்பூர்வ தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் தொலைந்து போன ஆவணங்கள் தொடர்பாக புகார் அளித்து அறிக்கை பெறுவதற்காக வசதிகளை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் பொதுமக்கள் 50 ரூபாய் செலுத்தி எல்டிஆர் எனப்படும் தொலைந்துபோன ஆவணங்கள் குறித்த புகார் அறிக்கையை ஆன்லைனில் உடனடியாக பெரும் வசதி உருவாக்கப்பட்டது. இவ்வாறாக, ஆவணங்கள் பறிபோனவுடன் முதற்கட்டமாக சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான முழு விவரத்தையும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக, எந்த ஆவணம் காணாமல் போனது, எவ்வாறு காணாமல் போனது பற்றிய தகவல்களை பதிவிட்டு புகைப்படம் உள்ள அரசாங்க அடையாள அட்டை ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.